இருள் துடைத்து ஒளி அருளும் புவி மேவிய ரகு வீரா - நட்பின் துயர் விலக்கி திறன் துலக்கு குலம் விளங்க வளம் வழங்கு கொட்டும் முரசு எட்டும் திசையாவும் இனிதே உன் புகழ்பாடி!
சுவர் சூழ்ந்த இருண்ட கருவறையின் இருளுக்குள் - நீ தோன்றினாய் இரவென்ன பகலென்ன உனக்கென்ன தெரியும் அறிவாய் ஒன்று இருள் மட்டும் தானே...
நீ வாழ தான் உண்டு தந்தாள் தனக்குள் இருக்கும் உந்தனக்கு அதை உண்டு அதற்குள் வடிவானாய் அழகுடை உருவானாய் பெரும் இடம் கேட்டாய் பொறுத்துக் கொண்டு இடம் தந்தால் கழிப்புற்ற நீயும்... ஓங்கி உதைத்து அன்னையின் உடலை வருத்தும் குறும்புகள் பல செய்தாய்.... அதையும் குறம்புடன் தாங்கி தடவிக் கொடுத்தாள் உன் அன்னை!
இவ்வாறு ஈரைந்து திங்கள் இனி்தே உனைச் சுமந்து பார்போற்ற நீ வாழ புதுவுலகம் காட்டிய உன் அன்னையே!!!! நீ கும்பிட வேண்டிய முதற் தெய்வம் போக வேண்டிய பெரும் கோயில்!
வைகறைப் பொழுதில் வானவில் வளைவில் உன் வதன நெற்றியின் நெளிவு நிதம் கண்டு உளம் கனிந்து உவகையுற்றேன்!
வில் நிறம் தனில் கண்ணின் கரு வட்ட வடிவு கண்டு என்னை ஈர்க்கும் இயைவை எண்ணி ஏங்கி நின்றேன்!
சாளரவோரம் நின்று விண்நோக்கி வெண் மேக மெல்லிய நல்லாடையணிந்த தண்மதியின் மெல்லிடை கண்டு உன்னிடையின் செந்நிறம்தனை நினைந்து உறைந்து உருகினேன் என் தோழி....